காடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் வந்த பிரபல தொடரான சந்தனக்காடு தொடரில் வீரப்பனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம் ஒகேனக்கல் காட்டுப் பகுகளில் மறைந்திருப்பதாக ஒரு காட்சி. அந்தக் காட்டுப் பகுதியைக் காட்டுவதாக சில கோப்புக் காட்சிகளைக் காட்டினார்கள். அதில் யானைகள், குரங்குகள், சிங்கங்கள் உலவுவதாகக் காட்டினார்கள். எனக்கோ ஒரே ஆச்சரியம் ஒகேனக்கல் காட்டில் சிங்கமா? மதிப்பிற்குரிய வீரப்பன்தான் தோலுக்காக சிங்கங்களை சுட்டு வீழ்த்தியிருப்பாரோ என்று தோன்றியது. தொடரை இயக்கிய கெளதமனின் காட்டுயிர் அறிவை எண்ணி வியந்தேன். அது இருக்கட்டும், சிங்கங்கள் நம் நாட்டுக்கு உரிய உயிரினங்களே இல்லை என்கிறார் பிரபல காட்டுயிர் ஆய்வறிஞர் வால்மீகி தாப்பர்.
சமீபத்தில் இந்தியாவின் முதன்மையான வரலாற்றறிஞர்களுள் ஒருவரான ரோமிலா தாப்பர் மற்றும் மொகலாய வரலாற்று ஆய்வாளர் யூசுப் அன்சாரியுடன் வால்மீகி தாப்பர் எழுதிய Exotic Aliens: The Lion & The Cheetah in India என்ற நூல் சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் நம் நிலப்பரப்புக்குரிய உயிரினங்களே இல்லை என்கிறது. பல்வேறு வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார்கள் இவர்கள். இந்திய காட்டுயிர் சகாப்தத்தில் இது மிக முக்கியமானதொரு ஆய்வு நூலாக பார்க்கப்படுகிறது. பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்திலும் இந்தியாவில் கிர் காடுகளிலும் மட்டும்தான் சிங்கங்கள் வாழ்கின்றன. ஆப்பிரிக்க சிங்கங்கள் உருவத்தில் பெருத்தவை. ஆசிய சிங்கங்கள் எனப்படும் இந்திய சிங்கங்கள் உடலமைப்பில் சிறியவை.காட்டின் அரசனாக நாட்டுப்புற கதைகளிலும் வலிமை, வீரத்தின் அடையாளமாக வரலாற்றிலும் சொல்லப்பட்ட சிங்கங்கள், நம் நாட்டுக்குரிய பிரத்யேக உயிரினங்கள் இல்லை என்பது பலருக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கலாம்.
’’உலகின் எல்லாக் கண்டங்களிலும் தொன்மையான மத வழிபாட்டுக்குரிய விலங்காக சிங்கம் இருந்திருக்கிறது. இதை வலிமையின் சின்னமாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் கொண்டாடிய பகுதிகளில் இது காட்டில் உலவியிருக்கும் ஒரு விலங்காக இருந்திருக்கும் என்று கருதுவதற்கு வாய்ப்பில்லை. பைபிளில்கூட சிங்கங்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை பாபிலோனிய பகுதிகளில் சிங்கத்தின் எலும்புகூடுகளோ, அவற்றின் மிச்சங்களோ கண்டறியப்படவில்லை. இங்கிலாந்து, பெல்ஜிய பேரரசுகளின் சின்னமாக சிங்கங்கள் உள்ளன. ஆனால் அந்தப் பகுதிகளில் மனித குடியேற்றத்திற்கு முந்தைய கால சிங்கங்களின் புதை படிமங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை’’ என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த சூழலியல் எழுத்தாளரும் கவிஞருமான ருத் படெல்.
இவருடைய கருத்துப்படியே தமிழில் சங்க இலக்கியங்கள் தொட்டு எண்ணற்ற இலக்கியங்களில் சிங்கம் தொடர்பான வர்ணணைகள், உவமைகள், வியப்புகள், போற்றுதல்கள் பதியப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் குறித்து பல்வேறு காலக்குழப்பங்கள் இங்கே உண்டு. பொதுவாக முதலாம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்டிருக்கலாம் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.
வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர், அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போதோ அல்லது அவருடைய படையெடுப்புக்குப் பிறகோ சிங்கங்களின் வருகை நிகழ்ந்திருக்கலாம் என்கிறார். அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு கி.மு. 327ல் நிகழ்ந்தது. சங்க இலக்கியங்களில் கிரேக்க, ரோமானிய மக்களுடன் வணிக தொடர்பு இருந்தது சொல்லப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரபூர்வ சான்றுகளாக புதுச்சேரி அரிக்கமேடு பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள ரோமானிய கலைப்பொருட்கள் மற்றும் நாணயங்கள் (கி.மு. 1 நூற்றாண்டைச் சேர்ந்தவை) மூலம் தெரிந்துகொள்ளலாம்.
எனவே இவ்வகையான தொடர்புகள் மூலம் சிங்கங்கள் இங்கே வந்திருக்கலாம், அல்லது சிங்கத்தைப் பற்றி வாய்மொழியாகவோ சித்திரங்கள் மூலமாகவோ பண்டைய தமிழ்மக்கள் அறிந்திருக்கலாம். வலிமையின் வீரத்தின் அடையாளமாக இருந்த சிங்கங்கள் ஏன் சேர, சோழ, பாண்டிய அரசர்களின் கொடிகளில் இடம்பெறவில்லை? சிங்கத்துடன் ஒப்பிட்டு பாடப்பெற்றவ மன்னர்கள் ஏன் தங்கள் கொடிகளில் சிங்கத்தைக் கொண்டிருக்கவில்லை. சிங்கம் இந்த மண்ணுக்குரிய விலங்கு அல்ல என்பதற்கு இதை ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம். மற்றொரு முக்கியமான ஆதாரமாக தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்லும் ஐந்திணைகளை எடுத்துக்கொள்வோம். இதில், காடும் காட்டைச் சார்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் குறிஞ்சித் திணையின் கருப்பொருள்களில் புலி, யானை, கரடி,பன்றி என்ற விலங்குகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. சிங்கத்தை வேறு திணைகளின் கருப்பொருள்களிலும் சொல்லப்படவில்லை.
அடுத்து, பல்லவர் கால மாமல்லபுர கல்சிற்பங்களில் சிங்க உருவங்கள், சிலைகள் பல இடங்களில் வடிக்கப்பட்டுள்ளன. இதை சிங்கங்கள் தமிழகத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரமாகக் கொள்ளலாம் என காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான சு. தியடோர் பாஸ்கரன் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்னும் நூலில் சிங்கங்கள் பற்றி கட்டுரையில் தெரிவிக்கிறார். பல்லவர்கள் (கிபி 6ம் நூற்றாண்டு) வடக்கிலிருந்து வந்தவர்கள் என்கிற கருத்தாக்கத்தை வரலாற்றாசிரியர்கள் பலர் முன்வைக்கிறார்கள். சிங்கங்கள், வட இந்தியாவில் நன்கு அறிமுகமான விலங்காக இருந்திருக்கலாம், அது வழிபாட்டுக்குறியதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். அதன்பேரில் நம்பிக்கை கொண்டிருந்த பல்லவர்கள் இங்கு ஆட்சி செலுத்தியபோது அவற்றை சிலைகளாக செதுக்கியிருக்கக்கூடும்.
காட்டுயிர் எழுத்தாளர் ச.முகமது அலி, சிங்கங்கள் 6000 வருடங்களுக்கு முன்பு வடக்கு ஆப்பிரிக்கா வழியாக இந்தியாவிற்குள் வந்திருக்கலாம் என்கிற கருத்தை முன்வைக்கிறார். பண்டைய நகரமான பால்க் (ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பகுதி)லிருந்து கி.பி. 6ம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தவை என்கிறார் வால்மீகி தாப்பர். காலங்கள் வேறுபட்டாலும் இருவருடைய முடிவுகளும் சிங்கங்கள், இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டவை என்பதை சொல்கின்றன. எதற்காக சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டன? அரசர்கள், குறுநில மன்னர்கள் தங்களுக்கு கட்டுப்பட்ட வனப்பகுதிகளில் செல்லப்பிராணிகள் போல் விட்டு வளர்ப்பதற்காக கொண்டுவந்தனர். 17ம் நூற்றாண்டில் மொசாம்பிக் காடுகளிலிருந்து அதிக அளவிலான சிங்கங்கள் தருவிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார் வால்மீகி. சிவிங்கிப்புலிகளை மொகாலய மன்னர்கள் தங்கள் அரண்மனைகளிலேயே செல்லப்பிராணிகளாக வளர்த்திருக்கிறார்கள்.
அக்பரிடம் 1000 சிவிங்கிப்புலிகள் இருந்ததாக அக்பர் நாமா என்கிற நூல் கூறுவதாக கட்டுரை ஒன்றில் சு. தியடோர் பாஸ்கரன் தெரிவிக்கிறார். அதேபோல் திப்பு சுல்தானிடம் 16 சிவிங்கிப்புலிகள் இருந்ததாகவும் அதே கட்டுரையில் சொல்லியிருக்கிறார். சிறுத்தை சற்றே பெருத்த உருவமும் உயரத்தில் சற்றும் குறைந்தும் இருக்கும். சிறுத்தை நீண்டு உயர்ந்த ஒல்லியான உடல்வாகைக் கொண்டது. இப்படியான உடல்வாகால் சிவிங்கிப்புலியால் மிக வேகமாக ஓட முடிகிறது. இந்த காரணத்தால்தான் இந்திய மன்னர்கள் காட்டில் வேட்டையாடச் செல்லும்போது சிவிங்கிப்புலிகளை தங்களுடன் அழைத்துச் செல்வதை விரும்பியிருக்கின்றனர். சிங்கங்களைப் போலவே சிவிங்கிப்புலிகளும் வேற்று நிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை என்பதற்கான வலுவான ஆதாரங்களாக இவற்றைக் கொள்ளலாம்.
இந்த நூலில் ரோமிலா தாப்பர், ’’சிங்கங்கள் இந்த மண்ணுக்குரிய தனித்துவமான விலங்காக இருந்திருக்கும் பட்சத்தில் இந்தியாவின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான ஹரப்பா முத்திரைகளில் புலி, காளை, காண்டாமிருக உருவ முத்திரைகள் உள்ளதுபோல், சிங்க முத்திரை ஏன் இடம் பெறவில்லை? 8லிருந்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களில் சிங்க உருவங்கள் எதுவும் காணப்படவில்லை’’ என்கிறார். ’’புலிகள், சிறுத்தைகளோடு சிங்கம், சிவிங்கிப்புலிகளும் நம் காடுகளில் திரிந்திருக்குமென்றால், புலிகள், சிறுத்தைகள் மட்டும் இன்றுவரை எப்படி நிலைத்திருக்க முடிகிறது. இவற்றின் வலிமையோடு ஒப்பிடும்போது சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் வலிமை குறைந்தவை அல்ல. எனில் எப்படி அவை முற்றிலுமாக அழிந்துவிட்டன?’’ என்கிற கேள்வியை முன்வைக்கிறார் வால்மீகி. ’
’குஜராத்தில் ஜூனாபாத் நவாப், சிங்கங்களைப் போற்றி வளர்த்தார். தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து வேறுபகுதிகளுக்கு சிங்கங்கள் கொண்டு செல்லப்படுவதை தடை செய்தார். இன்றைய குஜராத் ஆட்சியாளரும் சிங்கங்களை தம் மாநிலத்தின் சொத்தாகக் கருதுகிறார். மத்திய பிரதேச மாநில வனப்பகுதியில் சிங்கங்களைக் கொண்டு போய் விட்டு, அவற்றைப் பெருக்கும் திட்டத்தை எதிர்த்தார் மோடி. இந்த விஷயத்தில் முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களின் நிலைபாடு ஒன்றாகவே இருக்கிறது’’ என்கிறார் வால்மீகி.
இந்த நூலின் தொடர்ச்சியாக தமிழ் இலக்கியங்கள், வரலாற்று குறிப்புகளில் சிங்கம் மற்றும் சிவிங்கிப்புலிகள் குறித்து மறுவாசிப்பு அவசியமாகிறது. இந்த நூலை மறுத்தோ, ஆதரித்தோ பல்வேறு தடையங்கள் கிடைக்கலாம். இந்த நூலைப் பற்றிய அறிமுகத்தில் ’’இருக்கவே இருக்காது!’’ என தன்னுடைய வியப்பைத் தெரிவிக்கிறார் சான்சுவரி ஏசியா ஆசிரியர் பிட்டு சாஹல். உண்மை சில சமயங்களில் வியப்பையும் ஏற்படுத்துவதுண்டு.
பதிவு : மு.வி.நந்தினி