மருதநிலப் பேரூர்களில் பண்டமாற்றியர் அல்லது வணிகர் தோன்றியிருப்பர். ஆண்டுதோறும் பல கூலங்களும் புதிதாகவும் ஏராளமாகவும் விளைந்த தால், முந்தின ஆண்டில் மீந்துபோன கூலங்களை வாங்கவும், அவற்றிற் கீடாக உழவர்க்கு வேண்டிய பிறநிலத்துப் பொருள்களைக் கொண்டுவந்து தரவும், உழவரினின்றே ஒருசிலர் வணிகராகப் பிரிந்திருத்தல் வேண்டும்.
"யாண்டுகழி வெண்ணெல்" என்று ஐங்குறுநூற்றுப்பாடல் கூறுவதை நோக்குக. "ஒன்றிரண்டாம்வாணிகம்" என்பதும் வணிக முயற்சியை ஊக்கியிருத்தல் வேண்டும்.
பண்ணியம் = பண்ணப்பட்ட பொருள், விற்பனைப் பண்டம்.
(மதுரைக்.405)
பண்ணியம் - பண்ணியன் - பண்ணிகன் - பணிகன் - வணிகன் = பல பண்டங்களை விற்பவன். வணிகன் - வாணிகன்.
(பக்கம் - 58, தமிழர் வரலாறு நூல் பகுதி-1, பாவாணர்)
நிலவணிகத்தார் பாதுகாப்பும் உதவியும் நோக்கி, எப்போதுங் கூட்டமாகவே சென்றுவந்தனர்.
அக் கூட்டத்திற்குச் சாத்து என்றுபெயர்.
சார்தல் = சேர்தல், கலத்தல், கூடுதல்.
"நல்லெழில் மார்பனைச் சார்ந்து"
(கலித்.142)
சார் - சார்த்து - சாத்து =
1. கூட்டம்.
"சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும்"
(கல்லா.63:32)
2. வணிகர் கூட்டம்.
"சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்"
(சிலப்.11:190)
சாத்து - வ. ஸார்த்த.
சாத்து - சாத்தன் =
1. வணிகக் கூட்டத் தலைவன்
(நன்.130, மயிலை.)
2. வணிகர் தெய்வமான ஐயனார்
(அரு.நி.)
3. வணிகர்க்கிடும் இயற்பெயர்களுள் ஒன்று.
4. சீத்தலைச் சாத்தனார்.
"அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன்"
(சிலப்.பதி.10)
5. யாரேனும் ஒருவனைக் குறிக்கும் பொதுப் பெயர்.
"அக் கடவுளாற் பயன்பெற நின்றானோர் சாத்தனை"
(தொல். பொருள். 422,உரை)
6. உழவர் எருதிற்கிடும் விரவுப்பெயர்.
வடவர் ஐயனாரைக் குறிக்கும்போது சாஸ்தா என்றும், சாஸ்த்ரு என்றும் திரிப்பர். இதனின்று அவர் ஏமாற்றை அறிந்து கொள்க.
சாத்தர் = வெளிநாடு சென்றுவரும் வணிகக் கூட்டத்தார்.
"அதர்கெடுத் தலறிய சாத்தரொ டாங்கு"
(அகம்.39)
சாத்தவர் = சாத்தர்.
"பழுதில் சாத்தவர்கள் சூழ"
(திருவாலவா. 27:1)
சாத்தன் என்னுஞ் சொல்பிற்காலத்திற் சாத்துவன் என்றும் சாத்துவான் என்றுந் திரிந்தது.
கண்ணகியின் தந்தை மாசாத்துவான் (பெருஞ்சாத்தன்) என்று இயற்பெயர் பெற்றிருந்தமை காண்க.
சாத்தர் தம் வணிகச் சரக்குகளை ஏற்றிச் செல்ல முதலிற் பொதியெருதுகளைப் பயன்படுத்தினர். பின்னர் மேலையாசியாவினின்று கழுதை, குதிரை, ஒட்டகம், கோவேறு கழுதை ஆகியவற்றைப் படிப்படியாகக் கொண்டு வந்து பழக்கினர்.
கழுதையின் பிறப்பிடம், வடகிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தி யோப்பியா சோமாலியா முதலிய நாடுகளும், மேலையாசியாவில் சிரியாபாரசீகம் பெலுச்சித்தானம் முதலிய நாடுகளும், நடுஆசியாவில் திபேத்தும் மங்கோலியாவும் ஆகும்.
குதிரையின் பிறப்பிடம் ஆசியாவின் வடநடுப்பாக மென்றும், அங்கிருந்து அது கிழக்கே சீனமங்கோலிய நாடுகட்கும், மேற்கே ஐரோப்பாவிற்கும், தென்மேற்கே பாரசீகம், அரபியா முதலிய நாடு கட்கும், சென்றதாகச் சொல்லப்படுகின்றது.
ஒட்டகத்தில், ஒற்றைத் திமிலிக்கு, அரபியாவும், இரட்டைத் திமிலிக்குப் பகத்திரியாவும் (Bactria) பிறப்பிடமாகச் சொல்லப்படுகின்றது.
கோவேறு கழுதை, பிற்காலத்திற் கி.மு.ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே சின்ன ஆசியாவிற் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. அது ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கலப்பினமாகும்.
வணிகச் சாத்திற்குக் கழுதையும் குதிரையுமே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன.
"தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப நெரியற்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்
தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்."
(பெரும்பாண்.77-80)
அரபிக் குதிரைகள் பெரியனவும் பேணுதற் கரியனவுமாதலால், பெரும்பாலும் படைகட்கும் அரசர் ஊர்தற்குமே பயன்படுத்தப்பட்டிருக்கும்.
நாட்டுத்தட்டு என்றும் அச்சிமட்டம் என்றும் சொல்லப்படும் சிறுதரக் குதிரைகளையே சாத்துகள் பயன்படுத்தியிருக்கும்.
நாட்டுத்தட்டு இந்தியாவிலேயே வளர்க்கப்படுவது. அச்சிமட்டம் சுமதுராத் (Sumatra) தீவின் வடமேற்குப் பகுதியாகிய அச்சியிலிருந்து (Achin) வந்தது.
சாத்துகள் குதிரைகளைப் பயன்படுத்தியதை, பெருஞ்சாலை வழிகளில் ஆங்காங்குக் கட்டப்பட்டிருக்கும் சாத்தனார் (ஐயனார்) கோவிற்குமுன், சுதையாலும் சுடுமண்ணாலும் செய்து நிறுத்தப்பட்டுள்ள குதிரையுருவங்களினின்று அறிந்துகொள்ளலாம்.
(பக்கம் - 65, 66, 67, தமிழர் வரலாறு நூல் பகுதி-1, பாவாணர்)