நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளைச் சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அன்றுமுதல் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நெல் ஜெயராமன் தொடங்கினார்.
இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், நெல் ஜெயராமனால் உருவாக்கப்பட்டுள்ள
இந்த பாரம்பரிய நெல் மையம், இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த ஆய்வு மையமாகத் திகழ்கிறது.
பாரம்பரிய நெல்திருவிழா:
ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார். தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்கின்றனர்.
இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் 2 கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச் செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு வரும்போது 4 கிலோ விதையைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
இந்த நிபந்தனையுடன் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன. இது அப்படியே பழங்குடி வாழ்வியலின் பண்பு இங்கே நெல் விதை விற்கப்படவில்லை மாறாக பெருக்கப்படது! இதே மாதிரி அனைத்து வகையான பயிர்களின் பாரம்பரியமான விதைகளையும், விலங்கினங்களின் (மனிதனையும் சேர்த்துத்தான்) விரியமான விந்துகளையும் (!) பாதுகாத்து பெருக்க வேண்டும்!
ஆம் நாம் சாப்பிடும் உணவுகள் கிட்டதட்ட 75% மரபணுமாற்றப்பட்ட உணவுகளே இதை உண்டால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இனப்பெருக்கம் தடைபெறும். சென்னையில் பெருகும் விந்து (semen) நிலையங்களே இதற்கு சாட்சி. சல்லிக்கட்டு போராட்டத்தில் நாட்டு மாடுகளைப்பற்றிய புரிதலும், நெல் ஜெயராமன் அவர்களின் உழைப்பால் நாட்டு நெல் ரகங்களை அறிந்தமாதிரி, இன்னும் நாம் நிறைய தூரம் பயணிக்கவேண்டும்!
இதனால்தான் என்னவோ நம்மாழ்வார் அப்பவே ‘இனி விதைகளே பேராயுதம்’ என நூல் எழுதினார். அதில் நெல் ஜெயராமன் அவர்கள் நெல் விதை எனும் ஆயுத்ததை கெயிலெடுத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தியிருக்கிறார் இதேமாதிரி அனைத்து பாரம்பரிய விதைகளையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே அவர்களுக்கு செய்யும் கைமாறு.
நெல் ஜெயராமன் அவர்களின் இழப்பு நெல்லையே சார்ந்து இருக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு மற்றுமோர் இழப்பு.